தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நீலாங்கரை வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற நபர், வீட்டின் பின்புறம் வழியாக நுழைந்து மாடியில் நீண்ட நேரம் இருந்ததாக தெரியவந்தது. காவலாளி அளித்த தகவலின் பேரில், நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வீட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்தன. அதில் முக்கியமாக, அவர் வெடி குண்டு போன்ற ஆபத்தான பொருட்களை வைத்திருக்கலாமோ என்ற அச்சத்தினால், எழும்பூரிலிருந்து வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து வீடு முழுவதும் சோதனை செய்தனர். அவர்களுடன் ஒய் பிரிவு பாதுகாப்பு படையினர் மற்றும் நீலாங்கரை போலீசாரும் கலந்து கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே விஜய்க்கு மத்திய அரசு சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் அவரது வீட்டை சுற்றி பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இருந்தாலும், இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது பாதுகாப்பு முறையில் குறைபாடுகள் உள்ளனவோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜயின் வீட்டில் அத்துமீறி நுழைந்த சம்பவம், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் தூண்டியுள்ளது. இதனால், வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நீலாங்கரை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.