சென்னை: 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வெளிவந்த இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக்கணிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், திமுகவின் வாக்கு சதவீதம் 52 லிருந்து 48 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை திமுகக்கு புதிய சவாலாகவும், சிலருக்கு சாதகமாகவும் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் வெறும் திமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டும் பிரிக்காமல், பெண்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் எனப் பல தரப்பினரின் வாக்குகளையும் கவர்ந்து வருகிறார்.
பத்திரிகையாளர் மணி தனது கருத்தில், 2006ல் விஜயகாந்த் 8.9% வாக்குகளை பெற்றதைப்போல், இம்முறை விஜய் குறைந்தது 15% வாக்குகளை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு என தெரிவித்துள்ளார். அவர் முழுமையாக அரசியலில் இறங்கினால், அதன் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதனால், திமுக எளிதில் மீண்டும் வெற்றி பெறும் நிலை இல்லை. வரலாறு மீண்டும் நிகழும் என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய அவர், 2006ல் நடந்தது துன்பியல் நாடகம் என்றால், 2026ல் அது கேலிக்கூத்தாக மாற வாய்ப்புண்டு என சுட்டிக்காட்டினார்.
விஜயின் வருகையால் அதிமுக – திமுக என இரு தரப்பையும் விரும்பாத வாக்காளர்களும் புதிய அரசியல் தளத்தை நோக்கி நகரலாம். இதனால் தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.