கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டி கிராமப் பகுதியில் சிப்காட் அமைக்கப்படும் என 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்படி, பணிகள் துவங்கியுள்ள நிலையில், குலசேகரபுரம் ஊராட்சி மக்கள், சிப்காட் அமைந்துள்ள பகுதி தங்கள் ஊராட்சி எல்லைக்குள் வர வேண்டும் என வலியுறுத்தி, சிப்காட்டில் அமைந்துள்ள தங்கள் ஊராட்சியில் வரி வசூலிக்க ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில், அரசு அறிவித்தபடி, லிங்கம்பட்டி ஊராட்சியில் சிப்காட் தொழிற்சாலைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தி லிங்கம்பட்டி கிராம மக்கள் இன்று காலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கோவில்பட்டி- கூடலையூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நாலாட்டின் புதூர் போலீசார் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்ததையடுத்து, வட்டாட்சியர் சரவணப்பெருமாள் தலைமையில் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினரின் கோரிக்கையை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும், இதுகுறித்து முறையான மனு அளித்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.