திருச்சியில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ‘உமீத்’ சட்டத்தின்படி மாநிலத்தில் வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வரவேற்று நன்றியைத் தெரிவித்தார்.

இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். வக்பு வாரியம் தொடர்பான அறிவிப்பு, தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும், முஸ்லிம் சமூக நலனுக்காக எடுத்த முடிவாகவும் அவர் தெரிவித்தார். தளபதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சமூக நீதி, மதச்சார்பற்ற நிலைப்பாடு ஆகியவற்றில் தெளிவாக செயல்படுவதை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் திமுக குரல் கொடுத்ததை காதர் மொகிதீன் நினைவூட்டினார். இதோடு பாலஸ்தீன மக்களுக்கு நேரும் அநீதிகளுக்கும், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது திமுக அரசின் மக்கள் சார்ந்த நோக்கத்தைக் காட்டுகிறது என்றார்.
ஒன்றிய அரசு அவசரமாக கொண்டு வந்த வக்பு சட்டத்திற்கு தமிழக அரசு சட்டப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தில் வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று உறுதிபடுத்தியிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இதனை சமூகநீதிக்கான போராட்டத்தின் இன்னொரு வெற்றியாகக் கருதலாம்.