சென்னை: சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக பெண்கள் ஹெல்ப்லைன் மற்றும் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ‘பிங்க்’ ஆட்டோக்கள் செயல்படுத்தப்படும் என சமூக நலத்துறை கடந்த ஆண்டு மானிய கோரிக்கையில் அறிவித்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8-ம் தேதி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து, முதற்கட்டமாக 100 பெண்களுக்கு இளஞ்சிவப்பு ஆட்டோக்களை வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் ஆட்டோக்களுக்கு மானியத்தில் ரூ. 1 லட்சம் மற்றும் வங்கி கடன் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்டமாக பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் சமூக நலத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, இரண்டாம் கட்ட பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு இதுவரை 141 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் நகர சாலைகளில் சிலர் பிங்க் நிற ஆட்டோக்களை ஓட்டி செல்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து சமூக நலத்துறை கள ஆய்வுக்குழுவினர் இது தொடர்பாக கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினர்.
இதில், பிங்க் நிற ஆட்டோக்களை சிலர் வணிக போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், உடல்நலக் குறைவால் பெண் பயனாளிகள் ஆட்டோ ஓட்டாத நாட்களில், அவர்களது கணவர்கள் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பெண்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக நலத்துறை தற்போது எச்சரித்துள்ளது.