ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு, கேரளாவின் வயநாடு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கே.எஸ்.ஆர்., எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணை ஆகிய இரண்டும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், மழை குறைந்ததால், தண்ணீர் திறப்பும் குறைந்து, தண்ணீர் வரத்து குறைந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை முதல் கேஎஸ்ஆர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக அணை 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை இன்று காலை 100 அடியை எட்டிய நிலையில், நேற்று இரவு நீர்மட்டம் 95.06 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோல் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,20,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான பிலிகுண்டுக்கு தற்போது 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றின் அருகே கொண்டு வர வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் ஆற்றங்கரையோரம் பல்வேறு மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒகேனக்கல் முதல் நாகமாரை வரையிலான ஆற்றங்கரையோர பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.