திருச்சி: அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அமராவதி அணையில் இருந்து 36 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் நேற்று காலை 6 மணி முதல் முக்கொம்பு மேல் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் காவிரியில் வரும் நீரின் அளவை பொறுத்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோரம் உள்ளவர்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. கால்நடைகளை ஆற்றில் ஓட்ட வேண்டாம். சலவைத் தொழிலாளர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.