திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலையில் குரங்குகள் மற்றும் சிறு விலங்குகள் வசிக்கின்றன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மலையை சுற்றி ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. தண்ணீர் தொட்டிகளில் மழை பெய்தால் மட்டுமே போதுமானது.
கோடை வெயிலால் குரங்குகள் மற்றும் சிறு விலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து மலைப்பாதையில் ஆங்காங்கே சிறிய தண்ணீர் தொட்டிகளை அமைத்து தினமும் காலை மலையடிவாரத்தில் இருந்து இருசக்கர வாகனங்களில் தண்ணீர் ஏற்றி குரங்குகளுக்கு தாகம் தணித்து வருகின்றனர். கடந்த 50 நாட்களாக இவ்வாறு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

தினமும் பழங்களை கொண்டு வந்து குரங்குகளுக்கு கொடுத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த தாகம் தீர்க்கும் முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழங்கள், தண்ணீர் வழங்க பொதுமக்கள் முன்வந்து வருகின்றனர்.