தர்மபுரி/மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மாலையில் கூட நீர்வரத்தில் மாற்றம் இல்லாததால் வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்தது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம், அருவிகளில் குளித்தும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது.”
இதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரிக்க துவங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 3-ம் தேதி வினாடிக்கு 7,153 கன அடியாகவும், 4-ம் தேதி 6,416 கன அடியாகவும், நேற்று முன்தினம் 8,268 கன அடியாகவும் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 12,713 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்று அணை நீர்மட்டம் 92.60 அடியாகவும், நீர் இருப்பு 55.67 டிஎம்சியாகவும் இருந்தது.