மேட்டூர்: தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத்ராம் சர்மா, மேட்டூர் அணையை நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு குறிப்பிட்ட நாளான ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று காலை ஆய்வு செய்தார்.
அணையின் வலது கரை-இடதுகரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கப்பாதை மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். மேலும், மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு, ஆய்வு சுரங்கப்பாதை, அணை மின் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையின் பராமரிப்பு சிறப்பாக உள்ளது. நான் வழக்கமான ஆய்வுக்காக வந்துள்ளேன். அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன் அணையில் நேரடி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டு டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆய்வு பணிகளை முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் ரூ.20 கோடியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்படுவதற்குள் இப்பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்டதும் பணிகள் நிறுத்தப்படும். பாசன காலம் முடிந்ததும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,200 கன அடியாக குறைந்தது. அதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம், 1,872 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 922 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால், மீண்டும் நீர்மட்டம் குறைய துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் 107.82 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 107.79 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 75.30 டிஎம்சி.