சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணிகள் கிடைப்பதில்லை. எனவே பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கவும், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கவும் உண்ணப்படும் தர்பூசணிகள் குறித்து பொய்யான செய்திகள் பரவி வருவதால் பொதுமக்கள் தர்பூசணி மீது அச்சம் அடைந்துள்ளனர்.
தர்பூசணிகள் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ரசாயனம் கலந்த தர்பூசணிகள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோதான் குழப்பத்துக்குக் காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டினார். மேலும், தர்பூசணியை சாப்பிட மக்கள் தயங்குவதால், அவற்றின் விற்பனை வெகுவாக குறைந்து, ரூ.14,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட தர்பூசணி பழங்கள் ரூ.3,000 கூட யாரும் வாங்க முன்வருவதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு டன் அறுவடை செய்யப்பட்ட தர்பூசணிகள் 5 நாட்களில் அடர்சிவப்பு நிறமாக மாறும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்களின் அச்சத்தைப் போக்க தமிழக அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், ரசாயனம் கலந்த தர்பூசணி (அடர் சிவப்பு நிற பழங்கள்) கண்டறியப்படவில்லை. ஆனால், அதே நேரத்தில், ஆய்வின்போது, பல கடைகளில் கெட்டுப்போன, எலி கடித்த, அழுகிய பழங்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்து, சம்பவ இடத்திலேயே அழித்தோம். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. நீங்கள் தாராளமாக நம்பிக்கையுடன் தர்பூசணிகளை வாங்கிச் சாப்பிடலாம்.
இயற்கையாகவே, தர்பூசணிக்கு ஒரு நிறம் உள்ளது. ஆனால் அது வெளிர் சிவப்பு நிறத்தில் இல்லாமலோ, மிகவும் சிவப்பு நிறமாக இருந்தாலோ, அல்லது சாப்பிடும் போது சர்க்கரை போல இனிப்புச் சுவையாக இருந்தாலோ, அதில் ரசாயனங்கள் கலந்திருக்கும். இது சிலர் செய்யும் தவறு. இதைத்தான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம். எனவே, மக்கள் குழப்பமடைய வேண்டாம். நாங்கள் விவசாயிகளுக்கு எதிரிகள் அல்ல. சென்னையைப் பொறுத்தவரை தர்பூசணிகள் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வாறு அவர் கூறினார்.