தமிழக கடலோர பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:- இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இவற்றின் தாக்கத்தால் தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.
காலையில் லேசான மூடுபனி இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 71.6-73.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும்.
9-ம் தேதி தெற்கு வங்கக் கடலின் வடக்குப் பகுதியும், 10-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடலின் வடக்கிலும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.