தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில், அதிகாலை முதல் விற்பனை நடைபெற்றது. திருநெல்வேலி, மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு, வீட்டு செம்மறி ஆடுகள், குறும்பு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
வளர்ந்த ஆடுகள் ரூ.7,000 முதல் ரூ.30,000 வரை விலைக்கு வாங்கப்பட்டன. தீபாவளி பண்டிகையையொட்டி எட்டயபுரம் மாட்டுச்சந்தைகளில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் வடலூர் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை நடந்தது.
குறிஞ்சிப்பாடி, குள்ளச்சாவடி, தம்பி பேட்டை, பண்ருட்டி, காடாம்புலியூர், கொள்ளுக்காரன் குட்டை, வடக்குத்து, மீன்சுருட்டி, மருவாய், கொளக்குடி, கம்மாபுரம், செத்துவார் தோப்பில் இருந்து ஏராளமான ஆடுகள் சனிக்கிழமை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன.
சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மாட்டுச்சந்தையில் ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தலைவாசல் கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனர்.