சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க காலக்கெடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், “தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த இரைச்சல் மற்றும் குறைந்த காற்று மாசு உள்ள பச்சை பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள், திறந்த வெளியில் பொதுமக்கள் கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். சப்தத்துடன் தொடர்ந்து வெடிக்கக் கூடிய வெடிகுண்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், அமைதி காக்கும் இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசு வழங்கும் அறிவுரைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.