சென்னை: தங்கம் விலை தொடர்ந்து வரலாறு காணாத உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவும், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பும் தங்க விலையை ராக்கெட் வேகத்தில் உயரச் செய்துள்ளன. டிரம்ப் பதவியேற்ற பிறகு தொடங்கிய இந்த உயர்வு கடந்த எட்டு மாதங்களில் பவுனுக்கு ரூ.20 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் 10 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று ரூ.4.42 லட்சம் லாபம் கிடைத்திருக்கும் அளவிற்கு தங்கம் உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரு நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்தது. அதே நேரத்தில் மாலைச் சந்தையில் சிறிதளவு குறைந்தாலும், இன்று மீண்டும் பவுனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பிறகு தங்கம் விலை மாறிமாறி உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பவுனுக்கு ரூ.75 ஆயிரம் தாண்டியது. பின்னர் சிறிது குறைந்த நிலையில், 8ம் தேதி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. 26ம் தேதி முதல் விலை வேகமாக ஏறி, நேற்று மறுபடியும் உச்சத்தை எட்டியது.
2024ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ.51 ஆயிரமாக இருந்தது. இன்று அது ரூ.77 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பவுனுக்கு ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய அளவில் லாபம் பெற்றுள்ளனர்.
இந்த உயர்விற்கு சர்வதேச காரணங்கள் இருந்தாலும், இந்தியாவில் அதிகரிப்பதற்கு ரூபாய் மதிப்பு சரிவும், அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக போரும் முக்கிய காரணங்களாகும். இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்கின்றனர்.