கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயிரிழந்த குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டிருந்த நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜய்யின் கரூர் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அக்டோபர் 17ஆம் தேதி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி இடம் மற்றும் நிர்வாக அனுமதி பிரச்சினைகள் காரணமாக வருகை தள்ளிவைக்கப்பட்டது.

தவெக நிர்வாகிகள் டிஜிபி அலுவலகம் மற்றும் கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்து அனுமதி கோரியிருந்தனர். நிகழ்ச்சி கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஹோட்டல் முந்தைய கூட்டம் நடந்த இடத்திற்கு அருகில் இருப்பதால், போலீசார் மாற்று இடம் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இட ஒதுக்கீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு நேரடியாக சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிப்பது முக்கியம் என்பதால், இவரின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போலீஸ் தரப்பின்படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிந்த பின், இந்த மாத இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில், தீபாவளிக்குப் பிறகு விஜய் கரூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கி, கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியதும், விஜய் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.