ராமேஸ்வரம்: இந்தியா-இலங்கை மக்கள் ஒன்று கூடும் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு திருப்பலி நடந்தது. காலை 9.30 மணிக்கு கொடியிறக்கம் செய்யப்பட்டதை அடுத்து திருவிழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த 8,200 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கச்சத்தீவு திருவிழா என்றால் அன்று முதல் இன்று வரை இந்திய பக்தர்கள் தேங்காய் இனிப்பு கொடுத்து ராணி சோப் வாங்குவதும், இலங்கை பக்தர்கள் ராணி சோப் கொடுத்து தேங்காய் இனிப்பு வாங்குவதும் ஆகும். இந்த பண்டமாற்று முறை பழங்காலத்திலிருந்தே ஒரு பாரம்பரியம்.
கடந்த ஆண்டு, இந்திய பக்தர்கள் இந்த நிகழ்வைப் புறக்கணித்தனர். இதனால் இந்த ஆண்டு ராணி சோப்பை வியாபாரிகள் அதிகம் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இதன் விளைவாக, திருவிழா முடிவதற்குள் ராணி சோப்பு விற்றுத் தீர்ந்ததால், பல இந்திய பக்தர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.