முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை கவனிக்க போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நேற்று இரவு அமெரிக்காவுக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். செல்வதற்கு முன்பு இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரியாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.
தமிழக அரசின் விஜிலென்ஸ் கமிஷ்னர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷ்னர் ஆகிய 2 பொறுப்புகள் வகித்த கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகரை, தமிழக அரசின் பணியாளர்கள் தேர்வாணையத்தின் தலைவராக சமீபத்தில் நியமித்தார் ஸ்டாலின்.
பிரபாகர் மாற்றப்பட்ட நிலையில், அவர் பகித்த 2 பதவிகளுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். விஜிலென்ஸ் கமிஷ்னர் பதவியை குடிநீர் வடிகால் வாரியத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரான மணிவாசன் ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பாகவும், வருவாய் நிர்வாக கமிஷ்னர் பதவியை வருவாய்த்துறை செக்ரட்டரியாக இருக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கூடுதல் பொறுப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்திருக்கிறார்.