சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் மதியம் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை, கோயம்பேடு, வளசரவாக்கம், கிண்டி, அசோக் நகர், போரூர், மதுரவாயல், ஆயிரம் விளக்கு, வானகரம், சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது குளிர்ந்த வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

ஆவடியில் மழையுடன் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். ஆவடியில் பலத்த காற்று வீசியதால் விளம்பர பேனர் கிழிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் போலவே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.