தமிழக பதிவுத்துறை, வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate – EC) சேவையை ஆன்லைனில் எளிதாக்கி பொதுமக்களுக்கு பேருதவியாக மாற்றியுள்ளது. வில்லங்க சான்றிதழ் ஒரு சொத்துக்கு யாருக்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் முக்கிய சான்றாகும். இதில் சொத்தின் மதிப்பு, சொத்தை தந்தவர், வாங்குபவர் பெயர், பதிவு ஆண்டு, பதிவு எண், அடமானம் வைத்து கடன் எடுத்திருப்பது போன்ற விவரங்கள் அடங்கும். இந்தச் சான்றிதழ் மூலமாக சொத்து யாரிடமிருந்து எப்படி மாற்றப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

பொதுமக்கள் சொத்து வாங்கும்போது முந்தைய பதிவு விபரங்களை சரி பார்க்க EC-ஐப் பெறுகிறார்கள். ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால், குறிப்பிட்ட நாட்களில் மெயில் முகவரிக்கு வில்லங்க சான்றிதழ் கிடைக்கும் வசதியும் உள்ளது. இதற்கிடையில் சில நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. குறிப்பாக, சொத்து எந்த மண்டல, எந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனும் விபரம் அடங்கவில்லை என்பதால் வெளியூர் குடிமக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இதனைத் தீர்க்க, விரைவில் ஸ்டார் 3.0 சாப்ட்வேர் அமலுக்கு வரும். இதில் வில்லங்க சான்றிதழில் மண்டலம், மாவட்டம் போன்ற விபரங்களும் சேர்க்கப்படும் என பதிவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நகர்ப்புற நிலங்கள், சொத்துக்களின் வில்லங்க விபரங்களை பொதுமக்கள் எளிதாக பெற முடியும்.
மேலும், நகர்ப்புற நிலங்களை பிளாக், வார்டு எண் அடிப்படையிலும் தேடுவதற்கான வசதியும் இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பழைய சர்வே தகவல்களைப் பயன்படுத்தி வில்லங்க சான்றிதழ் விவரங்களை தேடும் போது ஏற்படும் சிரமம் குறையும். பொதுமக்கள் இப்போது மனை எண், வீட்டு எண் போன்ற அடிப்படைகளில் நகர்ப்புற நிலங்களுக்கான வில்லங்க விவரங்களை எளிதில் அறிய முடியும்.