காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ரங்கசாமி குளம் அருகே உள்ள ஏ.கே.டி. தெருவில் சக்திவேல் – சரண்யா தம்பதியினர் வசிக்கின்றனர். சக்திவேல் – சரண்யா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் கார்த்திகாவுக்கு கடந்த மூன்று நாட்களாக திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கார்த்திகாவுக்கு காய்ச்சல் வந்தவுடன், அவரது தந்தை சக்திவேல் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்ற பிறகு, காய்ச்சல் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கார்த்திகாவின் காய்ச்சல் திடீரென அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. அதிக காய்ச்சல் காரணமாக, கார்த்திகாவும் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கார்த்திகாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கார்த்திகாவை சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். சில மணி நேரம் அங்கு சிகிச்சை பெற்ற பிறகு, சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். மர்ம காய்ச்சலால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால், மர்ம காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொற்று காய்ச்சலா என்பதை சுகாதாரத் துறையினர் விசாரிக்க வேண்டும்.
மேலும், காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் சுகாதாரத் துறை இணை இயக்குநர் செந்தில் கூறுகையில், “காய்ச்சல் எதனால் வேண்டுமானாலும் ஏற்படலாம். இறந்த குழந்தை வாழ்ந்த பகுதியில் டெங்கு அல்லது வேறு எந்த தொற்று நோயும் இல்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முழுப் பகுதியிலும் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.