ஊத்துக்கோட்டை: கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான மிக்ஜாம் புயல் பலத்த மழையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள், ஆற்றங்கரைகள் சேதமடைந்தன. இந்நிலையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரியில் இருந்து இரவோடு இரவாக வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், சிட்ரப்பாக்கம், பெரியபாளையம், ஆரணி, ஏ.என்., குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் சேதமடைந்தன.
இந்நிலையில் ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆரணி ஆற்றின் கரையை சீரமைக்க ₹23 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாலேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவயல், ஏ.என். குப்பத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.
இதையடுத்து ஆரணி ஆற்றின் பெரியபாளையம் பகுதியில் கரையோரத்தில் கற்கள் பதிக்கும் பணி சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கரைகளை சீரமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது.
கடந்த சில நாட்களுக்கு முன் பென்ஜால் புயல் காரணமாக பெய்த மழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலம் பிச்சத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் புதிதாக கட்டப்பட்ட கரைகள் மீண்டும் சேதமடைந்தன. சேதமடைந்த இந்த கரைகளை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.