விருதுநகர்: விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மார்ச் 28 முதல் ஏப்.20 வரை திருவிழா நடக்கிறது. இதில் விற்பனைக்கான பல்வேறு பொருட்கள், உணவுக் கடைகள், 8-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் இரவு சுனாமி ராட்டினத்தில் 20-க்கும் மேற்பட்டோர் தலைகீழாக ஏற்றிச் செல்லப்பட்டபோது, விருதுநகர் பாத்திமாநகரைச் சேர்ந்த காளிராஜ் மகள் கவுசல்யா (22) குதிரை வண்டியில் இருந்து தவறி விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனாமி ரத்னா உரிமையாளர் சிட்டிபாபு, மேற்பார்வையாளர் தேவேந்திரன், மேலாளர் அஜீஸ்குர்னார், ஆபரேட்டர் முகேஷ் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.