சென்னை: பார்முலா 4 கார் பந்தயம் நிறைவடைந்ததையடுத்து, பந்தயம் நடந்த பகுதி முன்பு போலவே வாகன பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கார் பந்தயத்துக்கான தற்காலிக மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய இந்தியாவின் முதல் இரவு கார் பந்தயம் (ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 கார் ரேஸ்) சென்னையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்றது.
சென்னை தீவு, போர் நினைவிடம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலைக்கு 3.5 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த நாட்களிலும், போட்டிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமையும் மொத்தம் 3 நாட்கள் அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இப்போட்டியில் வெளிநாட்டு வீரர்கள், பிற மாநில வீரர்கள், தமிழக வீரர்கள் என கார் பந்தய வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கார் பந்தயத்தில் பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக கார் பந்தயத்திற்காக சென்னை தீவு, போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலைக்கு 3.5 கி.மீ. புறச் சாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில், ரோட்டை பழைய நிலைக்கு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், முன்பு போலவே வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கார் பந்தய போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை அகற்றும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.