சென்னை: தமிழகத்தின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சுகாதார தரத்தை மேம்படுத்த, உலக வங்கி உதவியுடன், 2019 முதல், சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஐந்தாண்டு திட்டத்தில், 2,854.74 கோடி ரூபாய் செலவில், பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,998.32 கோடி உலக வங்கியும், ரூ.856.42 கோடி மாநில அரசும் வழங்குகிறது. 2019 முதல், உலக வங்கியிலிருந்து ரூ.1,621.86 கோடி பெறப்பட்டு, தொற்று நோய்கள், விபத்து சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்கள், மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் இந்த ஆண்டு முடிவடைவதால், மீதமுள்ள ரூ.376.46 கோடி மற்றும் புதிய கட்டமைப்புகளுக்கு ரூ.3,000 கோடி வழங்க உலக வங்கியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர், மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு, வாஷிங்டனில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில், வங்கியின் தெற்காசிய பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், உருவாக்கப்பட்டு வரும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை உலக வங்கி அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தற்போது கோரப்பட்டுள்ள ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்கவும் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் நலத்துறைகளின் செயல்பாடுகளை உலக வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து, எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார்கள். உலக வங்கி அதிகாரிகளுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்ததாக அவர் கூறினார்.