புது டெல்லி: இந்தியாவில் உள்ள ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் ஜனவரி முதல் மே 2025 வரை 24 மில்லியன் ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளனர். இது 2024-ம் ஆண்டின் அதே 5 மாத காலத்தை விட 57 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி நிறுவனமான கனலிஸ் (ஓம்டியா) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி செய்வதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டித்த போதிலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களில் 77 சதவீதம் அமெரிக்காவிற்கு சென்றது.
மே 2025 நிலவரப்படி, 77 சதவீத ஐபோன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 54 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை இந்தியாவில் இருந்து மொத்த ஐபோன் ஏற்றுமதியில் 52 சதவீதத்துடன் ஃபாக்ஸ்கான் முன்னணியில் இருந்தாலும், டாடா இப்போது ஆப்பிளின் இந்திய உற்பத்தியில் ஒரு முக்கிய சக்தியாக விரைவாக வளர்ந்து வருகிறது. டாடாவின் ஐபோன் உற்பத்தி பங்கு 2024 இல் 13 சதவீதத்திலிருந்து 2025-ல் 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டாடா கடந்த ஐந்து மாதங்களில் 7.5 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக, கனாலிஸின் மொபிலிட்டி (ஒம்டியா) மூத்த ஆய்வாளர் சன்யம் சௌராசியா தெரிவித்தார். மே மாதத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து ஐபோன்களிலும் 89 சதவீதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டன, இது ஒரு வருடத்திற்கு முன்பு 58 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் ஐபோன் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு ஏப்ரல் மாதத்தில் 80 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 87 சதவீதமாகவும் இருந்தது என்று கனாலிஸ் தெரிவித்துள்ளது.
சீன தயாரிப்புகள் மீதான அமெரிக்க வரிகளைத் தவிர்ப்பதற்கான ஆப்பிளின் உத்தியின் தெளிவான பிரதிபலிப்பாகும். அதிகரித்து வரும் புவிசார் அரசியல் மற்றும் வரி விகிதங்களுக்கு மத்தியில், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க ஆப்பிள் தனது இந்திய உற்பத்தி தடத்தை தீவிரமாக விரிவுபடுத்துகிறது. 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை உற்பத்தி செய்வதை ஆப்பிள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம், நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை விரைவாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளது, இவை செப்டம்பரில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், ஃபாக்ஸ்கான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு $4.4 பில்லியன் மதிப்புள்ள ஐபோன்களை அனுப்பியுள்ளது, இது 2024-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட $3.7 பில்லியனைத் தாண்டியுள்ளது என்று கனலிஸ் தெரிவித்துள்ளது.