ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்இ4 மாடலை வரும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிவு விலையில் கிடைக்கும் ஐபோன் எஸ்இ வரிசையின் நான்காவது ஜெனரேஷனாக வெளிவரவுள்ள இந்த மாடல், முந்தைய எஸ்இ மாடல்களை விட சிறப்பான டிசைன் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேருடன் வந்திருக்கிறது.
கடைசியாக ஐபோன் எஸ்இ3 மாடல் 2022 ஆம் ஆண்டில் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஐபோன் எஸ்இ4 பற்றிய தகவல்கள் கடந்த சில மாதங்களாக டெக்னாலஜி வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வருகின்றன. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதிய ஐபோன் எஸ்இ4 மாடல், ஐபோன் 14 போல டிசைன் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.1 இன்ச் ஓஎல்இடி திரை கொண்டிருக்கும் இந்த போனில், பிரபல டைனமிக் ஐலேண்ட் அம்சம் இருக்காது என கூறப்படுகிறது.
இதன் ஃப்ரேம், ஆப்பிளின் மற்ற முக்கிய மாடல்களை விட வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 8 ஜிபி ரேம், ஏ18 சீரிஸ் செயலி, 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய ஐபோன் எஸ்இ4 மாடல் இந்தியாவில் சுமார் ரூ.50,000 விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து மலிவு விலை மாடலாக வெளிவரவுள்ளதால், அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.