வாஷிங்டன்: ஐபோன் தயாரிப்பு நடவடிக்கைகளை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு விரைவாக மாற்ற ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஆப்பிள் உலகில் விற்கும் 232.1 மில்லியன் ஐபோன்களில் 28% அல்லது 65 மில்லியன் ஐபோன்கள் அமெரிக்காவில் விற்கப்படுகின்றன. ஆப்பிள் சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து அதிக எண்ணிக்கையிலான ஐபோன்களை தயாரித்து பெறுகிறது. 2026-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவிற்கான ஐபோன் உற்பத்தி நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள டாடா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களுக்கு ஐபோன் உற்பத்தி நடவடிக்கைகளை வழங்கியுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஃபாக்ஸ்கான் ஆலைகளில் ஐபோன் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. ஐபோன் உற்பத்தி – ஏன் இந்தியாவிற்கு மாற்றப்படுகிறது? சீனா-அமெரிக்க வர்த்தகப் போர் காரணமாக ஐபோன் தயாரிப்பு நடவடிக்கைகளை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் அதிக ஆர்வம் காட்டி வருகிறது.

அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். பின்னர், டிரம்ப் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தார். இருப்பினும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களுக்கு விதிக்கப்பட்ட 20% வரி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த வரி விதிப்பால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களின் விலை உயரும். ஐபோன்களின் விலை உயர்வைத் தவிர்க்க, அவற்றை இந்திய நிறுவனங்களே தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.