டெல்லி: நம் சூரியக் குடும்பத்தில் பல அதிசயங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. அதில் நிலா குறித்த ஆய்வுகள் எப்போதுமே விஞ்ஞானிகளுக்கு வியப்பை தருபவையாகவே இருக்கின்றன. சமீபத்தில் நிலவில் துரு உருவாகி வருவதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆக்ஸிஜனும் நீரும் இல்லாத இடத்தில் துரு ஏற்படுவது எப்படி சாத்தியம் என்பதே பெரிய கேள்வியாக இருந்தது.
சமீபத்திய ஆய்வுகளில் நிலவின் துருவப் பகுதிகளில் இரும்பு ஆக்சைடின் ஒரு வடிவமான ஹேமடைட் (துரு) கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு புவி காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் இருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை பூமி மாதந்தோறும் சில நாட்கள் தடுக்கிறது. அப்போது புவியின் வளிமண்டல துகள்கள் நிலவுக்குச் சென்று ஆக்சிஜனேற்றம் ஏற்படுகிறது. இதுவே துருப்பிடிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

2020ஆம் ஆண்டில் இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவின் துருவங்களில் துரு இருப்பதை உறுதி செய்தது. ஆனால் அது எப்படித் தோன்றியது என்பது மர்மமாக இருந்தது. இப்போது புவியிலிருந்து செல்லும் துகள்களே காரணம் என அறிவியல் உலகம் நம்புகின்றது. இந்த ஆய்வு முடிவுகள் ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த கண்டுபிடிப்பு நிலா–பூமி இடையிலான உறவைப் பற்றிய புதிய பார்வையைத் தந்துள்ளது. எதிர்கால சந்திரப் பயணங்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும், இதுபோன்ற ஆய்வுகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.