புதுடில்லி: யூடியூப்பில் இருந்து பணம் சம்பாதிக்கும் விதிமுறைகள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, யூடியூப் பலருக்கும் பணம் சம்பாதிக்க ஒரு பெரிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. வெறும் கைபேசியிலேயே வீடியோக்களை உருவாக்கி, பதிவேற்றி, ரசிகர்களை ஈர்த்து வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால், தற்போது பலர் கீழ்மட்ட தரம் கொண்ட அல்லது பிறரது உள்ளடக்கத்தை திருத்தி மறுபடியும் பதிவேற்றும் முறையில் வருமானம் ஈட்ட முயல்கிறார்கள். இதை கட்டுப்படுத்தும் நோக்கில், யூடியூப் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி, யூடியூப் பார்ட்னர் திட்டத்தில் தொடர, உள்ளடக்க தரம், மூலபண்பு மற்றும் பார்வை தரவுகள் முக்கியமாக கருதப்படும்.
இனி, யாரும் வெறும் 1,000 சந்தாதாரர்கள் மற்றும் 4,000 பார்வை நேரத்தை அடைந்தாலே போதும் என நினைக்க முடியாது. அவர்களின் உள்ளடக்கம் யாருடையது என்பதை பிரித்தறியப்படும். சாதாரணமாக உருவாக்கப்பட்ட, காப்பி அடிக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட அல்லது டெம்ப்லேட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு இனி யூடியூப் சம்பளமளிக்காது.
தாங்களாக உருவாக்கும் அசல் படைப்பாளிகள் மட்டுமே இந்த புதிய கொள்கையின் கீழ் வருமானம் பெற முடியும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான வீடியோக்களை பதிவேற்றம் செய்வது, தரம் குறைவாக உருவாக்கப்படும் உள்ளடக்கம் போன்றவையும் வருமானத்திலிருந்து விலக்கப்படும்.
இதன் மூலம் யூடியூப் பிளாட்ஃபாரத்தில் தரமான, வித்தியாசமான உள்ளடக்கம் உருவாக்கும் படைப்பாளிகள் அதிக வாய்ப்பு பெறுவார்கள். இது காப்பிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், உண்மையான படைப்பாளிகளுக்கு ஒரு ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.