இந்திய ரயில்வே தொடர்ச்சியாக பயணிகளின் வசதிக்காக புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போது, பல செயலிகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், பி.என்.ஆர். ஸ்டேட்டஸ், உணவு முன்பதிவு என அனைத்தும் இந்த ஒரே செயலியில் கிடைக்கும்.
முந்தைய காலத்தில் IRCTC, ரயில் கனெக்ட், யுடிஎஸ் ஆகிய செயலிகளை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது பயணிகள் இந்த புதிய செயலியை ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
இந்த செயலி பயன்பாட்டை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தனிப்பட்ட பயணத் திட்டங்களை தயார் செய்யலாம், உணவு முன்பதிவு செய்யலாம் மற்றும் ரயில்களில் உள்ள இடங்களை தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, பிளாட்பார்ம் டிக்கெட், சரக்கு சேவை விவரங்கள், ரயில்வே இ-வாலெட் போன்ற வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. புதிய பயனாளிகள் சுலபமாக பதிவு செய்து பயன்படுத்தலாம்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ID, Password கொண்டு இச்செயலியில் உள்நுழையலாம். இல்லையெனில், கெஸ்ட் லாக் இன் மூலமாகவும் OTP உதவியுடன் செயலியை பயன்படுத்தலாம்.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த செயலியை ரயில்வே தகவல் மையத்தின் 40வது ஆண்டு விழாவில் வெளியிட்டுள்ளார். பயணத்துக்கு முன் தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் பெறும் வசதியை இது தருகிறது.
இந்த ரயில் ஒன் செயலியின் நோக்கம் பயண அனுபவத்தை தரமானதாக்குவது என்பதுதான். பயணிகளின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.