மும்பை: ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு ஆரம்ப பொதுப் பங்களிப்பை (ஐபிஓ) வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்று கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி 2007-ல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கினார். 2016-ல், ஜியோ நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கத் தொடங்கியது.
அறிமுகம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ ஆதிக்கம் செலுத்தியது. ஜியோவுக்கு இந்தியாவில் தற்போது 48 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டாலர்கள். இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 33 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில், பொது பங்குகளை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜியோவைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெய்லும் பொதுவெளிக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 3,000 பல்பொருள் அங்காடிகளைக் கொண்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், முகேஷ் அம்பானி தனது டிஜிட்டல், டெலிகாம் மற்றும் சில்லறை வணிகங்களை விரிவுபடுத்துவதற்காக கேகேஆர், ஜெனரல் அட்லாண்டிக் மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து $25 பில்லியன் திரட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் இரண்டும் ஐபிஓவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் கடந்த அக்டோபரில் 270 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் 12.58 பில்லியன் டாலர்களை திரட்டியுள்ளன.