ரிசர்வ் வங்கி வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பணவியல் கொள்கை மதிப்பாய்வு கூட்டத்தையடுத்து, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது. அதன்படி, தற்போது இந்த விகிதத்தை மேலும் 0.25% குறைத்து, 6% என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்கா விதிக்கும் வரியால் பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது. இந்த சூழல் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது. இதன் விளைவாக, வங்கிகளிடம் பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களின் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொதுமக்களிடமிருந்து அதிக பணப்புழக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்த நிதியாண்டு கவலையான சூழலுடன் தொடங்குகிறது என்றும், சில வர்த்தக சிக்கல்கள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கின்றன என்றும் கூறியுள்ளார். எனவே, இவ்வாறான நிச்சயமற்ற சூழ்நிலைகளில் ரிசர்வ் வங்கி கவனமாக இருப்பதாக அவர் கூறினார்.
கொரோனா காலத்தில் 4% இருந்த ரெப்போ வட்டி விகிதம், 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை மாற்றப்படவில்லை. பின்னர், அது படிப்படியாக உயர்ந்து, கடந்த 2023 ஆம் ஆண்டில் 6.50% ஆக அறிவிக்கப்பட்டது. தற்போது, மீண்டும் இந்த விகிதம் 6% ஆக குறைக்கப்பட்டுள்ளது.