குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர, மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இது கடந்த 10 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்தாகவும், விமானக் காப்பீடு துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாகவும் கருதப்படுகிறது.

இந்த விபத்தின் பொருளாதார தாக்கம் மிகப் பெரியது. ஏர் இந்தியாவிற்கு இந்த விபத்துக்காக சுமார் $475 மில்லியன் (₹39.4 பில்லியன்) காப்பீட்டு தொகை கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமானத்தின் மேலோடு மற்றும் இயந்திரங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக மட்டும் சுமார் $125 மில்லியன் மற்றும் பயணிகளின் இழப்புக்கு $350 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது, 2023-ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் முழு வருட காப்பீட்டு செலவுகளை விட மூன்று மடங்கு அதிகம்.
இந்த விபத்தால் விமானக் காப்பீடு சந்தையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. காப்பீட்டு பிரீமியம் விலை உயரக்கூடும் என்பதோடு, வெளிநாட்டு பயணிகள் விபத்தில் உயிரிழந்ததால் ஏர் இந்தியாவின் செலவு மேலும் அதிகரிக்கும். சர்வதேச விதிகளின்படி இழப்பீடு கணக்கிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இழப்புகளை சர்வதேச மறுகாப்பீட்டாளர்கள் தாங்க வேண்டியுள்ளது.
டாடா ஏஐஜி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் காப்பீட்டு பிரீமியங்களில் பெரும்பகுதியை உலகளாவிய மறுகாப்பீட்டாளர்களுக்கு மாற்றியுள்ளதால், நிதிச் சுமை அவர்கள்மீதே விழுகிறது. இது உலகளாவிய விமானக் காப்பீடு சந்தையில் கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்றும், எதிர்காலத்தில் விமானக் காப்பீடு கொள்கைகள் அதிக கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் என்பதும் நிபுணர்களின் கருத்தாகும்.