உங்களிடம் இருக்கும் மதிப்புமிக்க சொத்துக்களில் ஒன்று உங்கள் நற்பெயர். இந்த நற்பெயர், உங்கள் வாழ்க்கையின் பல தருணங்களில் ஒரு மைல்கல்லாக செயல்படுகிறது. மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள், உங்களிடம் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், வாழ்க்கையில் கிடைக்கும் வாய்ப்புகள் – இவை அனைத்தும் நற்பெயரின் மீது நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன. ஆனால், சில நேரங்களில் நாம் கவனிக்காத சில பழக்கங்கள் நம் நற்பெயரை பாதிக்கக்கூடியவை. அவற்றைத் தவிர்த்தாலே நம் நற்பெயரைப் பாதுகாக்க முடியும்.

மற்றவர்களைப் பற்றி பிறர் முன்னிலையில் அல்லது அவர்களுக்கு தெரியாமல் பேசுவது, முதுகுக்குப் பின்பேசும் பழக்கம், நம் மீது மோசமான அபிப்ராயங்களை ஏற்படுத்தும். ஒருவரைப் பற்றி தவறாக பேசும் பொழுது, அதைப் பார்த்தவர்கள் நம்மை அவர்களையும் அப்படியே பேசக்கூடியவர்களாக எண்ணி நம்மை நம்ப மாட்டார்கள். இது நம் உறவுகளையும் பாதிக்கலாம்.
தொடர்ந்து புகார் கூறும் பழக்கம் கூட நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதை பகிர்வது சரி. ஆனால் எதையும் குறையாகவே பார்க்கும் பழக்கம் இருக்கும்போது, நாம் ஒரு எதிர்மறையான மனிதராக தோன்றுகிறோம். இது மற்றவர்களை நம்மிடம் இருந்து விலக வைக்கும். பிரச்சினைகள் பேசப்படுவதற்கும் தீர்வுகள் தேடப்படுவதற்கும் இடம் வேண்டும்.
நேரத்திற்கு வராமை என்பது மரியாதைக்கே கேள்விக்குறி வைக்கும். எப்போதும் தாமதமாக வருபவர்கள் மற்றவர்களின் நேரத்தையும், திட்டங்களையும் மதிப்பதில்லை எனப் படக் கூடும். இது நம்மை ஒழுங்கற்றவர் என்ற தோற்றத்தையும் கொடுக்கலாம். நேரத்தில் இருக்க முயற்சி செய்தாலே நம்பகத்தன்மையை நிலைநிறுத்த முடியும்.
வேறொருவர் செய்த முயற்சிக்கு நாம் பாராட்டு வாங்க நினைத்தால், அது நம் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும். ஒருவருடைய வேலைக்குப் பாராட்டு தெரிவித்துவிட நம் மதிப்பு குறைவதில்லை. மாறாக, நேர்மையாக நடந்துகொள்வது நம்மை மற்றவர்களின் நம்பிக்கையை வெல்ல வைக்கும்.
அதிகமாக வாக்குறுதி அளித்து, அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுவது நம் நம்பகத்தன்மையை நேரடியாக பாதிக்கும். நம்மிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யும். ஒவ்வொரு வாக்குறுதியும் நம்முடைய நற்பெயருக்கு அடித்தளமாக இருக்கக்கூடியது. எனவே, நம்மால் முடியாததை வாக்குறுதி கொடுக்காமல், முடியும் விஷயங்களுக்கே உறுதியளிப்பது நல்லது.
நம் நற்பெயர் ஒருநாளில் உருவாகாது. அது நம் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், மனிதர்களிடம் காட்டும் மரியாதை ஆகியவற்றால் உருவாகிறது. அதனை நாம் சிறிது கவனத்துடன் பராமரித்தாலே போதும் – அது வாழ்க்கை முழுவதும் நம்மை உயர்த்திக்கொண்டு செல்லும்.