சென்னை: ஜூன் 20ஆம் தேதி வெளியான குபேரா திரைப்படம், இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவானது. படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார். நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாதின் இசையுடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திரைக்கதை மற்றும் நீளத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

படத்தில் சில முக்கிய லாஜிக் பிழைகள், நம்ப முடியாத காட்சிகள் என விமர்சனங்கள் வந்தபோது, விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்தார். அவர் பதிவில், “குபேரா விமர்சனங்களை கேட்டு Nose piercing நாயகியும், Opposite Swimming மற்றும் Burned out forest நாயகர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். நெட்டிசன்கள் இதை நயன்தாரா, சிவகார்த்திகேயன், சிம்புவை குறிக்கும் மறைமுகமான குறிப்பாகவே புரிந்து கொண்டுள்ளனர்.
திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகியதாக அறிவிக்கப்பட்டாலும், தமிழ் பதிப்பு வெறும் டப்பிங் போல் இருந்தது. தனுஷ் தனது சிறப்பான நடிப்பால் படம் ஓடுவதற்குத் தூணாக இருந்தாலும், மூன்று மணி நேரம் ஓடும் படத்தின் நீளமே பெரும் சலிப்பை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கியமான ஒரு காட்சியில் லாஜிக்கே வாய்ப்பு இல்லாதது போல சாலையில் பணம் கொட்டும் காட்சி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்நிலையில் நயன்தாரா, சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரின் பெயர்களை நேரடியாக குறிப்பிடாமல் கூறிய ப்ளூ சட்டை மாறனின் பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் குறிப்பிட்ட கிண்டல், சிலரிடம் வரவேற்பையும் மற்றவர்களிடம் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குபேரா படம் வசூல் ரீதியாக வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், லாஜிக் பிழைகள் மற்றும் திரைக்கதை பற்றிய குறைகள் மக்களைப் பிரிப்பதற்கான காரணமாக உள்ளன.