இந்தியாவில் நீண்டதூர பயணங்களைத் திட்டமிடும்போது, பலரும் ரயிலையே முதன்மையாகத் தேர்வுசெய்கிறார்கள். குறைந்த கட்டணமும், வயதுவரம்பில்லாத வசதிகளும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக அமைவதாலும் இது சிறந்த தேர்வாக விளங்குகிறது. இந்த ரயில் பயணங்களில் நீளமான தூரம் செல்கின்ற சில குறிப்பிட்ட ரயில்கள் உள்ளன. அதில் முதன்மையானதொன்று தான் விவேக் எக்ஸ்பிரஸ்.

விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், இந்தியாவின் தெற்குத் தொடக்கம் வடகிழக்கு எல்லை வரை பயணிக்கிறது. இது அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் நகரத்திலிருந்து கன்னியாகுமரி வரை பயணிக்கிறது. இதன் மொத்த தூரம் சுமார் 4,273 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த ரயில், இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் ஒன்றாகும் என்பது பெருமைக்குரியது.
தி்ப்ரூகரில் இருந்து சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மூன்று நாள் மற்றும் நான்கு இரவுகள் பயணித்து, புதன்கிழமை காலை 11 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்று சேர்கிறது. இது சுமார் 80 மணி 15 நிமிடங்கள் பயணிக்கிறது. மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, திங்கள் காலை 7.15 மணிக்கு திப்ரூகரை அடைகிறது.
விவேக் எக்ஸ்பிரஸில் மொத்தம் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள், படுக்கை வசதி உடையவையும், பொது பயணிகள் வகை பெட்டிகளும் உள்ளன. இதில் அதிகபட்சமாக 1,800 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடிகிறது.
இந்த ரயில் தனது பயணத்தில் 55 இடங்களில் நின்று செல்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், பீகார், அசாம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள் இதில் பயணிக்கின்றனர்.
பயண வழித்தடம் மிகவும் விரிவாகவும், பல்வேறு மாநில கலாசாரங்களை இணைப்பதுபோலவும் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவில் செல்கிறது. அங்கிருந்து திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், கோவை, ஈரோடு, சேலம் வழியாக ஆந்திராவை அடைகிறது.
அதன்பின் புவனேஷ்வர், அசன்சோல், சிலிகுரி, குவாஹாத்தி, திமாபூர் வழியாக கடைசியாக திப்ரூகரை அடைகிறது. இவ்வாறான பயணம் இந்தியாவின் புவியியல் மற்றும் பண்பாட்டு பல்வகைமையை ஒரே பயணத்தில் அனுபவிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
இந்த பயணம் வெறும் இடமாற்றம் மட்டுமல்ல, இது இந்தியாவின் வளம், பரப்பளவு மற்றும் மக்கள் வாழும் மாறுபட்ட சூழல்களின் சிறந்த பிரதிபலிப்பு. விவேக் எக்ஸ்பிரஸ், பயணத்திற்கு மட்டுமன்றி, இந்திய ஒன்றியத்தின் நினைவூட்டலாகவும் திகழ்கிறது.