ஊட்டி: நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் உதகமண்டலம். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள ‘புளூ மவுண்டைன்’ எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது.
நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு. 12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர். இந்த மலையில் படர்ந்துள்ள யுகலிப்டஸ் மரத்திலிருந்து வரும் புகை நீல நிறத்தில் இருப்பதால் தான் இந்தப் பெயர் வந்தது என்றும் சொல்லப்படுகிறது.
ஊட்டியின் கலாச்சாரம், கட்டமைப்பு போன்றவற்றில் ஆங்கில அரசின் தாக்கத்தை இன்று கூட காணலாம். ஊட்டி , இங்கிலாந்து நாட்டின் ஒரு கிராமத்தைப் போல இருப்பதாக பல சுற்றுலா பயணிகள் கருதுகின்றனர். ஊட்டியின் அழகில் மயங்கிய ஆங்கிலேயர், ஊட்டிக்கு ‘மலைப்பிரதேசங்களின் ராணி’ என்று பெயர் சூட்டினார்கள். தென்னிந்தியாவின் பிற ஊர்களில் வெப்பத்தை அனுபவித்த ஆங்கிலேயர்கள், ஊட்டியைக் கண்டதும் பொக்கிஷத்தைக் கண்டதுபோல் மகிழ்ந்தனர்.
ஊட்டியில் உள்ள சில கட்டடங்கள் அந்தக் கால வடிவமைப்புடன் இருப்பதால், இந்த ஊரே ஒரு பழமைத் தோற்றத்துடன், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் வளர்ச்சி ஆங்கில ஆட்சியிலிருந்துத் தொடங்கியது. நவீன உலகிற்கு, ஊட்டியின் வரலாறு ஆங்கிலேயர்கள் குடியேறிய சமயத்திலிருந்து தொடங்குகிறது. கட்டிடங்களின் வடிவமைப்பு மற்றும் வீடுகளின் கட்டுமான பாணி அனைத்தும் பிரிட்டிஷ் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.