வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2025-2026ல் புதிய வரி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானத்தை வரி விலக்கு அளிப்பதும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானத்திற்கு புதிய 25% வரி அடுக்கை அறிமுகப்படுத்துவதும் அடங்கும்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-2026 தாக்கல் செய்ய உள்ளார். சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோர் இந்த பட்ஜெட்டில் இருந்து தள்ளுபடிகள் மற்றும் வரி குறைப்புகளை எதிர்பார்க்கின்றனர். தற்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பாதிக்கும் வரி செலுத்துவோருக்கு வரி பொறுப்பு இல்லை. ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் 30% என்ற அதிகபட்ச வரி அடுக்கின் கீழ் வருகிறது.

அந்த வேளையில், மத்திய அரசு அதிகாரிகள் இந்த வரி முறையில் முக்கிய மாற்றங்களை பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. அவை, ரூ.10 லட்சம் வரை வருமானத்திற்கு வரி விலக்கு அளித்து, ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வருமானத்திற்கு 25% வரி அறிமுகப்படுத்துவதாக இருக்கலாம். இதன் மூலம், ரூ.50,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை அரசாங்கம் வருவாய் இழப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது.
இந்த மாற்றங்களை முன்மொழிந்துள்ள உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி முயற்சி (GTRI) 2025-26 மத்திய பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளில், பணவீக்கத்திற்கு ஏற்ப வருமான வரி விலக்கு வரம்பை ரூ.5.7 லட்சமாக உயர்த்துவதும், சேமிப்பு வட்டிக்கு ரூ.10,000 விலக்கை ரூ.19,450 ஆக உயர்த்துவதும், காப்பீட்டு பிரீமியங்களுக்கும் PF பங்களிப்புகளுக்குமான விலக்கு ரூ.2.6 லட்சமாக சரிசெய்யப்படுவது போன்ற பரிந்துரைகளும் உள்ளன.
இந்த ஆண்டின் பட்ஜெட்டில், கடந்த ஆண்டை விட மூலதன ஆதாய வரி உயர்த்துவது பற்றிய ஆச்சரியமான அறிவிப்புகள் இல்லாமல், நுகர்வை ஊக்குவிக்கும் வரி நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது.