புதுடெல்லி: 2019-20 நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஒன்பதாவது தவணை தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே திரும்பப் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.8,499 வழங்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
தங்க இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், மத்திய அரசு நவம்பர் 2015 இல் தங்க சேமிப்புப் பத்திரத் திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம் ஒரு யூனிட்டாக வழங்கப்பட்டது.
தங்கப் பத்திரங்களில் முதலீடு வெளியிடப்பட்ட நாளிலிருந்து எட்டு ஆண்டுகளில் முழுமையாக முதிர்ச்சியடையும். இருப்பினும், முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெறுவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படும். அதன்படி, பிப்ரவரி 11, 2020 அன்று வெளியிடப்பட்ட பத்திரங்களை நேற்று முதல் முதிர்ச்சிக்கு முன்பே திரும்பப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, மீட்பிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 1 கிராம் தங்கத்திற்கு ரூ.8,499 வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பிப்ரவரி 6, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 24 காரட் தங்கத்தின் சராசரி விலையின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.