மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 8வது ஊதியக் குழுவின் அறிவிப்பு தொடர்பான அப்டேட்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு நம்பிக்கைகள் நிலவினாலும், இதுவரை குழுவின் தலைவர் அல்லது உறுப்பினர்கள் நியமிக்கப்படாத நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்த உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025ல் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயினும், சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் 8வது ஊதிய அமைப்பின் செயல்பாடு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரையிலான ஆண்டுக்குள் அமலாகலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இதற்கான நிதி ஒதுக்கீடு 2025-26 மத்திய பட்ஜெட்டில் சேர்க்கப்படாததால், இது மேலும் தாமதப்பட வாய்ப்பு அதிகம். பல முந்தைய ஊதியக் குழுக்களும் உருவாகிய நாளிலிருந்து முழுமையாக செயல்படுவது வரை 18 முதல் 24 மாதங்கள் எடுத்துள்ள வரலாறு உள்ளது. இம்முறை ஊதிய உயர்வு 30 முதல் 34 சதவீதம் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதுவரை ஊதிய திருத்தம் அமலாகவில்லை என்றாலும், அரசு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அகவிலைப்படியை திருத்தி வழங்கி வருகிறது. ஆனால் இந்த திருத்தங்களும் பெரும்பாலான சமயங்களில் தாமதமாகவே வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2025 ஜனவரியில் 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி சில மாதங்களுக்கு பிறகே ஊழியர்களை சென்றடைந்தது. இதுபோன்று 8வது ஊதியக் குழுவிலும் தாமதம் ஏற்பட்டால், நிலுவையில் உள்ள தொகைகள் பெரிதாகிவிடும் என்பதையும் நிபுணர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
தற்போது, பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், புதிய ஊதிய அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒருவரது அடிப்படை சம்பளம் ரூ.50,000 என எடுத்துக் கொண்டால், 8வது ஊதிய அமைப்பின் கீழ் வரும் உயர்வு 14 முதல் 54 சதவீதம் வரையிலானதாக இருக்கலாம். இருப்பினும், இது அங்கீகாரம் பெறும் வரை கால தாமதம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால், ஊழியர்கள் பொறுமையுடன் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.