பெர்பிளக்சிட்டி ஏஐ-யின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், 2017ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் மின் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர், கூகுளில் பணியாற்றிய அனுபவத்துடன் தற்போது உலகின் முன்னணி ஏஐ தளத்தை வழிநடத்தி வருகிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பெர்பிளக்சிட்டி ஏஐ நிறுவனம், தற்போது ஓபன்ஏஐ-யின் சேட்ஜிபிடிக்கு வலுவான போட்டியாளராக உள்ளது. சமீபத்தில், உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் பிரவுசரை வாங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 34.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,02,216 கோடி) அளவிலான முழு பணச் சலுகையை ஆல்ஃபாபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான குரோமை நோக்கி வழங்கியுள்ளது.

பெர்பிளக்சிட்டி ஏஐ, இதற்கு முன்பும் ஜனவரியில் டிக்டாக் அமெரிக்காவை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. இம்முறை, குரோமை பெற்றால் உலகளாவிய அளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டுவர முடியும் என்பதே அதன் நோக்கம். இது ஏஐ தேடல் போட்டியில் பெர்பிளக்சிட்டிக்கு வலு சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பெர்பிளக்சிட்டி ஏஐ ஏற்கனவே “காமெட்” எனும் ஏஐ பிரவுசரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், கூகுள் குரோம் போன்ற பெரிய பயனர் அடிப்படை இருந்தால், ஓபன்ஏஐ போன்ற முன்னணி போட்டியாளர்களுடன் நேரடியாக போட்டியிடும் வலிமை பெருகும்.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது தொழில் பயணத்தை 2018ல் ஓபன்ஏஐ-யில் ஆராய்ச்சி பயிற்சியாளராக தொடங்கினார். பின்னர் 2020 முதல் 2021 வரை கூகுளிலும், அதனைத் தொடர்ந்து டீப்மைண்ட் நிறுவனத்திலும் பணியாற்றினார். மீண்டும் ஓபன்ஏஐ-க்கு திரும்பி ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருந்தபின், 2022ல் ஆண்டி கோன்வின்ஸ்கி, டென்னிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ ஆகியோருடன் இணைந்து பெர்பிளக்சிட்டி ஏஐ நிறுவினார்.
இந்த நிறுவனம் இதுவரை நிவிடியா மற்றும் ஜப்பான் சாஃப்ட் பேங்க் போன்ற முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. கடைசியாக 14 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இருந்தது. தற்போது, கூகுள் குரோம் ஒப்பந்தம் நடந்தால், உலகளாவிய ஏஐ மற்றும் பிரவுசர் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டப் போட்டி தீவிரமடையும்.
இந்த நிகழ்வு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உலக அரங்கில் உருவாக்கும் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான பெர்பிளக்சிட்டி ஏஐ, எதிர்கால இணைய தேடல் மற்றும் பிரவுசிங் அனுபவங்களை மறுவரையறை செய்யும் ஆற்றல் கொண்டதாக பார்க்கப்படுகிறது.