2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கங்களுடன் மாறிக்கொண்டே உள்ளது. புவிசார் அரசியல் நிலைமைகள் மாறுபடுவதால், ஆசிய நாடுகள் தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்த நிலைமைகள், தங்க சுரங்க நிறுவனங்களுக்கும், அவை இயங்கும் நாடுகளுக்கும் சாதகமாக செயல்படுகின்றன. இத்தகைய சூழலில், உலகம் முழுவதும் பலரது கவனமும் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள் மீது திரும்பியுள்ளது.
சீனா, ஆசியாவில் தங்க இருப்பு வைத்திருப்பதில் முதலிடத்தில் உள்ளது. CEOworld பத்திரிகையின் தகவலின்படி, சீனா தற்போது 2,263 மெட்ரிக் டன் தங்கம் வைத்திருக்கிறது. அதன்பின்னர் இந்தியா 854 மெட்ரிக் டன் தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான் 846 மெட்ரிக் டன் தங்கத்துடன் மூன்றாவது இடத்தையும், துருக்கி 595 மெட்ரிக் டன் தங்கத்துடன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
தைவான் 423 மெட்ரிக் டனுடன் ஐந்தாவது இடத்தில், உஸ்பெகிஸ்தான் 374 மெட்ரிக் டனுடன் ஆறாவது இடத்தில், சவுதி அரேபியா ஏழாவது இடத்தில் உள்ளன.
கஜகஸ்தான் 296 மெட்ரிக் டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. லெபனான் 287 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஒன்பதாவது இடத்தில் மற்றும் தாய்லாந்து பத்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், 64.72 மெட்ரிக் டன் தங்கத்துடன் இந்த பட்டியலில் 20வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.