பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் இந்திய மின்னணு உற்பத்தித் துறையை அடுத்த 3-4 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி ரூ.17.20 லட்சம் கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரிகள், கோபால்ட் பொருட்கள், துத்தநாகம் மற்றும் மொபைல் போன் பேட்டரிகள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளதாக அவர் கூறினார். இது உள்நாட்டு பேட்டரி உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
இந்திய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அளவில் 20 செயற்கை நுண்ணறிவு தரவு கண்காணிப்பு மையங்களையும் 80 செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களையும் அமைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.
மின்னணுத் துறையில் தற்போது 25 லட்சம் வேலைவாய்ப்புகள் உள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இது நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு உற்பத்தித் துறையின் வெற்றிகளை எந்தத் துறைக்கும் ஒரு முன்மாதிரியாகப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
இதன் விளைவாக, இந்திய மின்னணு உற்பத்தித் துறை ரூ.17.20 லட்சம் கோடிக்கும் அதிகமாக வளரக்கூடும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.