மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வருமானத்தை பொருட்படுத்தாமல், அனைவருக்கும் மருத்துவ பாதுகாப்பை வழங்குகிறது.

இதன் மூலம், தகுதியானவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கிறது. 2018ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டம், ஏற்கனவே 6 கோடிக்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு நன்மை அளித்துள்ளது. ஆதார் கார்டைப் பயன்படுத்தி மருத்துவ அட்டையைப் பெற்றுக்கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள 24,000க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சையை பெறலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.pmjay.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஸ்மார்ட்போன் வாயிலாக முக சரிபார்ப்பு செய்யலாம்; இல்லையெனில் அருகிலுள்ள பொது சேவை மையம், PM-JAY கியாஸ்க் அல்லது பட்டியலிடப்பட்ட மருத்துவமனையில் நேரடியாக பதிவு செய்யலாம். தேவையான ஆவணங்களில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் குடும்ப அடையாள அட்டை அடங்கும். விண்ணப்பம் உறுதிப்படுத்தப்பட்டதும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் ஆயுஷ்மான் கார்டு வழங்கப்படும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இந்த கார்டை காட்டி, பணமில்லா சேவைகளைப் பெறலாம். உங்கள் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனவா என்பதை சரிபார்ப்பது முக்கியம். சந்தேகம் இருப்பின் 14555 ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம். சீனியர் சிட்டிசன்களுக்கு மிகப் பெரிய ஆதரவாக, இந்தத் திட்டம் மருத்துவ செலவின் சுமையை குறைக்கிறது.