பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல வங்கிகளும், நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி, பாங்க் ஆஃப் பரோடா வங்கியும் தனது கார் மற்றும் அடமானக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் எளிதாக நிதியுதவி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, கார் வாங்க விரும்புவோருக்கு இந்த அறிவிப்பு பெரிய நன்மையை தரும் வகையில் அமைந்துள்ளது.

வங்கி வெளியிட்ட தகவலின்படி, ஆட்டோ கடன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பரோடா அடமானக் கடனின் வட்டி விகிதம் 60 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 9.15% ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. பண்டிகை சலுகையாக இந்த வட்டி குறைப்பு வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கொள்கை முடிவுகளுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ரிசர்வ் வங்கி பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்த நிலையில், இதன் தொடர்ச்சியாக பாங்க் ஆஃப் பரோடா வங்கியும் தன்னுடைய கடன் விகிதங்களை சீரமைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பொறுத்து கூடுதல் வட்டி குறைப்புகளையும் பெறலாம் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாடிக்கையாளர்கள் பரோடா டிஜிட்டல் கார் லோன் தளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அருகிலுள்ள கிளையை அணுகியும் எளிதில் விண்ணப்பிக்கலாம். வங்கியின் இந்த பண்டிகை சலுகை, நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனையில் சந்தைக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு கார் மற்றும் வீட்டு தேவைகளுக்கான நிதி உதவிகள் சுலபமாக கிடைக்கும் சூழலை உருவாக்குவதே இம்முடிவின் நோக்கம்.