டெல்லியில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு அடுக்குகளாக இருந்த வரி அமைப்பு இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மொத்தம் 353 பொருட்களின் விலைகள் குறைய உள்ளன. குறிப்பாக, கார் விலைகள் பெரிதும் குறையப்போகின்றன. தற்போது 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் கார்களின் விலை 62,500 ரூபாய்வரை குறையக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலைகள் குறையும் நிலையில், செஸ் வரியும் நீக்கப்பட்டதால் சொகுசு கார்களின் விலையும் குறையப்போகிறது. ஆனால், ஏற்கெனவே செஸ் வரி செலுத்தி வாங்கிய சுமார் 6 லட்சம் கார்கள் இருப்பில் உள்ளன. இதனால் மஹிந்திரா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்தத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையால், ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருவதற்கு முன் கார்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கத் தொடங்கியுள்ளன. 2 முதல் 4 விழுக்காடு வரை சலுகை விலையில் விற்பனை செய்வதன் மூலம், செஸ் வரியால் ஏற்படும் இழப்பை குறைக்க முயற்சி செய்யப்படுகின்றது. இதனால் நுகர்வோருக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும், கார் உபகரணங்களும் சலுகை விலையில் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோருக்கு கார் வாங்க சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களில் ஆட்டோமொபைல் சந்தை சூடுபிடிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.