புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனமான ‘கொச்சி ஷிப்யார்ட்’ நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொச்சி ஷிப்யார்டு நாட்டின் மிகப்பெரிய கப்பல் பழுது மற்றும் கப்பல் கட்டும் நிறுவனமாகும்.
இதன் தலைமையகம் கொச்சியில் உள்ளது. செப்., 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின், 72.86 சதவீத பங்குகள், மத்திய அரசின் வசம் உள்ளன. 5 சதவீத பங்குகளை ஒரு பங்கு ரூ.1,540 என்ற விலையில் விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.
கிரீன் ஷூ ஆப்ஷனின் கீழ் 2.50 சதவீத பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு கூடுதலாக 2.50 சதவீத பங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று காலை வர்த்தகம் தொடங்கும் போது ரூ.1,605 ஆக இருந்த இந்நிறுவனப் பங்கின் விலை, 5 சதவீதம் சரிந்து, வர்த்தக நேர முடிவில் ரூ.1,598 ஆக சரிந்தது.