குன்னூர்: காலநிலை மாற்றத்தின் காரணமாக, நாட்டில் கடந்த ஆண்டில் தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கமான உபாசி சார்பில், சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் அடிப்படையில், 2023ஐ விட, கடந்த ஆண்டில், ஜனவரி முதல் நவம்பர் வரை, நம் நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும், 2023ல் 11 மாதங்களில் 130.93 கோடி கிலோ தேயிலை உற்பத்தி நடைபெற்றிருந்த நிலையில், கடந்த ஆண்டில் 125.54 கோடி கிலோ தேயிலை தூள் உற்பத்தி நடைபெற்றது. இதனடிப்படையில், 5.39 கோடி கிலோ தேயிலை உற்பத்தி குறைந்தது.
அதே நேரத்தில், தென் மாநிலங்களில், 2023ல் 21.85 கோடி கிலோ தேயிலை உற்பத்தி இருந்த நிலையில், கடந்த ஆண்டில் அது 20.85 கோடி கிலோவாக குறைந்தது. 1.01 கோடி கிலோ தேயிலை உற்பத்தி குறைந்தது.
தமிழகத்தில் மட்டும், 2023ல் 15.46 கோடி கிலோ தேயிலை உற்பத்தி இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 15.11 கோடி கிலோ உற்பத்தி நடைபெற்றது.
தேயிலை தூள் உற்பத்தி சரிவு 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது. நாட்டில் காலநிலை மாற்றம், பசுந்தேயிலை மகசூலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மொத்த உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக, வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.