இந்தியாவில் காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த அலுவலகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையின் ஓஎம்ஆர் ரோட்டில் 12.68 ஏக்கரில் அமைந்த இந்த அலுவலகத்தை பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.612 கோடிக்கு வாங்கி உள்ளது. காக்னிசண்ட் என்பது முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது, இது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் சென்னையும், கோவையும் உட்பட பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் 20 ஆண்டுகளாக காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தின் தலைமை அலுவலகமாக இந்த கட்டிடம் செயல்பட்டுள்ளது. முதலில், காக்னிசண்ட் அலுவலகம் அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள CSI கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கியிருந்தது. பிறகு, துரைப்பாக்கத்தில் நிலத்தை வாங்கி, 13.68 ஏக்கருக்கு கட்டடம் கட்டப்பட்டது.
இந்த அலுவலகத்தை விற்பனை செய்யும் முடிவுக்கு காக்னிசண்ட் அண்மையில் வந்தது. சென்னையில் உள்ள இந்த அலுவலகத்தை தற்போது பாகமனே கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியுள்ளது. பத்திரப்பதிவு 12ம் தேதி நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் முடிந்து, இவ்வழி அரசுக்கு ரூ.55.08 கோடி அளவுக்கு பதிவு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், காக்னிசண்ட் துரைப்பாக்கம் அலுவலகத்தை மாற்றி, தாம்பரம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் உள்ள மெப்ஸ் வளாகத்தில் புதிய தலைமை அலுவலகத்தை திறக்க உள்ளது. ஏற்கனவே, மெப்ஸ், சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி உள்ளிட்ட இடங்களில் காக்னிசண்ட் அலுவலகங்கள் உள்ளன.
துரைப்பாக்கம் அலுவலகத்திற்கு மழை காலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அலுவலகத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.